26 July 2020

வணக்கம் நான் உங்கள் பறக்கும் ரயில் பேசுகிறேன்....


வணக்கம் நான் உங்கள் பறக்கும் ரயில் பேசுகிறேன்....

 

என்னடா இது னு நினைக்காதீங்க... ENPT செத்து போன தனுஷ் பேசும்போது நான் பேசக்கூடாதா??? என்னுடைய சிறு கதையை சொல்கிறேன்...கேளுங்க..

 

முதலில் எந்த கம்புனாட்டி எனக்கு பறக்கும் ரயில்னு பேரு வச்சான்னு தெர்ல.... தரையின் மேல் தண்டவாளம் அமைத்து ஓடிய ரயில்களை பார்த்த சென்னை வாசிகள் அண்ணாந்து என்னை பார்த்தாங்க... உடனே ஏலே இந்த ரயில் பறக்குதுலேன்னு நெனச்சி எனக்கு பறக்கும் ரயில்னு கூப்பிட்டாங்க.. சரி அதுவும் ஒரு தனி கெத்தா வேற லெவல் ஃபீலிங்கு தான்....

 

என்னுடைய பயணம் சென்னை கடற்கரை ரயில் நிலயத்திலிருந்து ஆரம்பிக்கும்... எனக்கு ஒரு அண்ணன் இருக்கான்.. அவன் கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை செல்வான்.. சில சமயம் செங்கல்பட்டு வரைக்கும்.. அவன் முதலில் மீட்டர் கேஜாக இருந்தவன்.. ஆனால் நான் அப்புடி இல்லை.. ஆரம்பிக்கும் போதே அகல பாதை... சென்னை லோக்கல் ரயில்களில் நான் கடை குட்டி... ஒன்னு விட்ட அண்ணன் ரெண்டு பேர் இருக்காங்க.... ஒருத்தன் அரக்கோணம் இன்னொருத்தன் கும்மிடிப்பூண்டி.. அப்பப்போ எங்க வீட்ல வந்து அவங்க தங்கிப்பாங்க... ஆனா நாங்க ரெண்டு பேரும் அவங்க வீட்டுக்கு போக மாட்டோம்.

 

சரி குடும்பத்தை பற்றி சொல்லிவிட்டேன்.. இப்போது நான் பிறந்த கதை கூறுகிறேன் கேளுங்கள்... எங்க அண்ணன் தாம்பரம் வரை ஜம்முனு போய்ட்டு இருந்தான்.. அப்போது சென்னை கடற்கரையை ஒட்டி இருக்கும் இடங்களுக்கு ரயில் சேவை தேவை என்று எதிர்பாத்தார்கள்.. அப்போது சென்னை வளர்ந்து கொண்டிருக்கும் நேரம்.. எங்க அண்ணன் பொறந்த போது சென்னையில் பெரிய பெரிய கட்டிடங்கள் இல்லை... அவனுக்கு பாதை மிக சுலபமாக கிடைத்து விட்டது... ஆனால் என் நிலைமை மோசமாக இருந்தது.. எனக்காக தண்டவாளம் அமைக்க மக்களிடம் நிலம் கையகப்படுத்த அரசு கேட்டால் அருவா எடுத்து வெட்ட வந்தார்கள்...

 

அப்போதான் அரசுக்கு கணநேரத்தில் ஒரு யோசனை தோன்றியது.. வடிவேலுக்கு ஒரு தேள்பத்திரி  சிங்கு போல் சிக்கினான் பக்கிங்ஹாம் கால்வாய்.. அதாங்க நம்ம கூவம் ஆறு... அதுக்கு மேலயே போடுங்கடா தண்டவாளத்தை.. அப்புடி தான் என் பாதையை தேர்ந்தெடுத்தார்கள்... கால்வாய் மேலயே என் பயணத்தை தொடங்கினேன்.

 

முதலில் கால்வாய் மேல் சேப்பாக்கம் வரை சென்றேன்.. பிறகு மயிலாப்பூர் வரை... மக்கள் என்னை பெரிதளவு முதலில் பயன்படுத்தவில்லை... என்ன காரணமோ..

 

ஆனால் ஆரம்பித்த சில வருடங்களில் பல படங்களில் நடித்துவிட்டேன்.. என்னுடைய மயிலை ரயில் நிலையம் தான் டாப்பு... ஷ்ரூவ் தலைவர் கரண் முதல் ஆக்ஷன் கிங்கு அர்ஜுன் வரை பல படங்கள் நடித்து விட்டான். காரணம் அவன் ரம்மியமான அழகு... மேலே முழுவதும் ஒளியை பிரதிபலிக்கும் கூரை.. உச்சி வெயிலில் அப்புடியே தகதகன்னு மின்னுவான்.. அதுனாலயே பல படங்களில் பயன் படுத்திக்கொண்டார்கள்..

அடுத்த சிலவருடங்களில் என்னை வேளச்சேரி வரை நீட்டிப்பு செய்தார்கள்.. அப்போது தான் திருவான்மியூரீல் டைடெல் பார்க் வந்தது... திண்ணைல கிடந்தவனுக்கு திடுக்குனு வந்துச்சாம் வாழ்வுங்கிறமாதிரி என்னை பயன்படுத்தி வந்தவர்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்தது.

 

முதலில் நான் போகவேண்டிய பாதையே வேறு...திருவான்மியூரிலிருந்து நேராக சென்று மகாபலிபுரம் தான் என்னை அனுப்பி வைப்பதாக இருந்தார்கள். திருவான்மியூர் வரை பிரச்னை இல்லாமல் நல்லா தான் பாதை போட்டார்கள்.. சரி அப்புடியே மஹாப்ஸ் போய்ட்டு வந்துடலாம் னு பாத்தா அங்க தான் பிரச்னை.. திருவான்மியூர் கப்புறம் நிலம் சரியில்லை.. ரோடு சரியில்லைன்னு சொல்லி கைவிரித்து விட்டார்கள்.. நான் அம்போ என்று நடுத்தெருவில் நின்றேன்... எனென்றால் திருவான்மியூர் வரை முடித்து விடலாம் என்று பார்த்தால் அது  முடியாத காரியமாக இருந்தது.. முடியும் இடத்தில்  ஒரு பணிமனை வேண்டும் என்னை நிறுத்தி வைக்க.. அது திருவான்மியூரில் முடியாது.. சரி அப்புடியே ஒரு ரைட்டு எடுத்து தரமணி பெருங்குடி வழியாக வேளச்சேரி போய் விட்டேன்..

 

அப்போது வேளச்சேரி ஒரு காடு..  அதனால் நிலம் மிக சுலபமாக கிடைத்து விட்டது... நல்ல வேலை அது காடாக இருந்தது... நான் வந்தது கப்புறம் வேளச்சேரியை பாக்கணுமே.. சின்ராசு கைலயே புடிக்க முடியல.. அப்புடி ஒரு அபார வளர்ச்சி..  எல்லாம் சுலபமாக முடிந்தது என்று ஒரு பெருமூச்சு விட்டேன்.. என்னுடைய பயணமும் சுமுகமாக இருந்தது..மேற்கு சென்னை, கடற்கரையோர குடிசை இளைஞர்களை தொழிற்பூங்கா, தொழிற்சாலை என்று அறிமுகம் படுத்தி விட்டேன்.. அந்த பெருமை என்னையே சாரும்.. சில வருடங்களில் காலை வேலையில் பள்ளி செல்லும் மாணாக்கர்களை கூட ஏத்தி இறக்கி விட்டேன்.. என்னுடைய ரயில்நிலையங்கள் ஒட்டியே பல சுற்றுலா தளம், பள்ளிகள், கல்லூரிகள் என்று ஆரம்பித்தார்கள்.. சென்னையின் எல்லைகளை விரிவு படுத்திய பங்கு எனக்கும் உண்டு என்பதில் பெருமையாக இருக்கிறது. என்னுடைய ரயில்கட்டிடங்களின் முதலாவது மற்றும் இரண்டாவது அடுக்கு ஏன் எப்போதும் காலியாக கிடக்கிறது என்று யாராவது யோசித்தது உண்டா? முதலில் அவ்விடங்களை வணிகவாளகம் அமைப்பது என்றே இருந்துள்ளார்கள்.. ஆனால் அப்போது இருவருக்கும் சண்டை வந்துவிட்டது.. யாருக்கு என்று பாக்குறீங்களா?? வேற யாரு நம்ம தமிழ்நாடு அரசுக்கும் மத்திய அரசுக்கும்.. என்னடா உங்க சண்டை னு கேட்டா ரயில் நிலையம் அமைய நிலங்களை இலவசமாய் தந்துள்ளது தமிழ்நாடு அரசு.. அதில் மத்திய அரசு அவர்கள் காசு போட்டு கட்டிடங்கள் கட்டியுள்ளது... இப்போது வணிகவளாகம் அமைந்தால் அதில் வரும் வருமானம் யாருக்கு என்பது தான் சண்டை.. பெரிய வாய்க்காவரப்பு சண்டையாக  மாறிவிட்டது.. சரி உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம் னு ஒரு விகிதத்துல பிரிச்சிப்பாங்க னு பாத்தா யாருக்குமே வேணாம் னு முடித்து விட்டார்கள்.. அன்னைக்கு லந்து சந்திரமுகி படத்துல வர ரூம் மாறி இருக்கிறது...

 

என்னோடைய ரயில் நிலையங்கள் ஏதோ ஒன்னு ரெண்டு பிரபலம் கிடையாது.. நிக்குற எல்லாமே பிரபலம் தான்... ஒன்னு ஒண்ணா பாப்போமா.. முதலில் நான் நிற்பது சென்னை கோட்டை ரயில் நிலையம்.. புனித ஜார்ஜ் கோட்டை நிலையம் செல்ல இதை விட சிறந்த நிலையம் கிடையாது.. அடுத்து பூங்கா நகர்.. இங்கு தான் சிறிது குழப்பம்.. என் அண்ணன் காரன் நிற்கும் ரயில் நிலையத்தின் பெயர் சென்னை பூங்கா.. ஆனால் எனக்கு பூங்கா நகர்..எங்களுக்கு நடுவில் ஒரு சிறிய கால்வாய் குறுக்க ஓடுகிறது..அதனால் தான் இந்த பிரிவினை..பூங்கா நகர் இறங்கி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சுரங்கப்பாதை வழியாகவே சென்று விடலாம்.. அவ்வளவு பக்கம்... அப்புடியே சென்ட்ரல் மெட்ரோவிற்கும் செல்லலாம்.. பூங்கா நகர் தாண்டியதும் நான் மலை ஏறிவிடுவேன்... மலை ஏறியதும் நான் நிற்கும் முதல் இடம் சிந்தாதிரிப்பேட்டை... உங்களுக்கு என்ன மின்சார பொருட்கள் வேண்டுமானாலும் என்னை அணுகவும்... இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை.. விலை பேசுவது மட்டும் உங்கள் சாமர்த்தியம்...‌ அதற்க்கு சங்கம் பொறுப்பு ஏற்காது.. அடுத்து நான் செல்வது ஒரு உலக பிரபலமான இடம்... அதாங்க நம்ம சேப்பாக்கம் ரயில் நிலையம்.. இதன் ஜன்னல்கள் வழியாக சேப்பாக்கம் சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் அப்புடியே ரம்மியமாக காட்சி அளிக்கும்..கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்பொழுது காசு உள்ளவர்கள் மைதானித்திலுருந்து பார்ப்பார்கள்.. சற்று காசு குறைவாக உள்ளவர்கள் பத்து ரூபாய்க்கு பிளாட்பார்ம் சீட்டு வாங்கிவிட்டு என் ஜன்னல்கள் வழியாக பார்ப்பார்கள்.. அதுவும் ஒரு  தனி சுகம் தானே.. அங்கிருந்து பார்ப்பவர்களை விட இங்கிருந்து பார்ப்பவர்களே அதிகம்.... சேப்பாக்கம் இதற்கு மட்டும் பிரபலம் இல்லய்ங்க.. இங்கு இறங்கினால் தான் சென்னைக்கு புதுசாக வரும் MGR கன்னிகள் அவரின் கைக்கடிகார சத்தத்தை கேட்க முடியும்.. MGR சமாதி இங்கிருந்து அவ்வளவு பக்கம்.. அப்புடியே என்னை சுற்றி உள்ள எழிலகம் தூர்தர்ஷன் நிறுவன ஊழியர்கள் என்னை பயன்படுத்துவார்கள்... இந்த சிந்தாதிரிப்பேட்டைக்கும் சேபாக்கத்திற்கும் நடுவில் தான் ராஜாஜி இல்லம் உள்ளது... பெரிய தலைவர்கள் இறந்தால் இங்கு தான் அஞ்சலிக்கு வைப்பார்கள். எனக்கு நன்கு ஞாபகம்  இருக்கிறது... கலைஞர் மற்றும் அம்மா இறந்தபோதும் அவர்களின் உடல்களை இங்கு தான் வைத்தார்கள்... நானும் என்னுடைய பயணிகளும் ஒரு நிமிடம் நின்று (நடுவழியில்) அஞ்சலி செலுத்திவிட்டு தான் சென்றோம்..ரொம்போ சோகமான நாள். சரி சேப்பாக்கம் அடுத்து நான் செல்வது திருவல்லிக்கேணி.. மெரினா கடற்கரை செல்ல இதை விட சரியான நிலையம் கெடயாது.. அதுமட்டுமா உலகிலேயே மீசை வைத்த பெருமாள் குடியிருக்கும் பார்த்தசாரதி கோவில் அமைந்திருக்கும் இடம்... அப்புடியே மெரினா செல்ல கடைசி வாய்ப்பாக இருக்கும் இடம் கலங்கரை விளக்கம் ரயில் நிலையம்.. எல்லோருக்கும் வழிகாட்டியாய் நிற்பவன் பார்க்கவே கொள்ளையழகு. இதற்கு அப்புறம் நம்ம பக்கிங்காம் கால்வாய் இடது பக்கம் திரும்பும்.. நானும் திரும்புவேன்.. திரும்பியவுடன் தென்படுவான் மயிலை கபாலி. கபாலிக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு கிளம்பினால் போய் சேரும் இடம் மந்தைவெளி.. இங்கு பல பள்ளி மாணவர்கள் என்னை உபயோகப்படுத்துவார்கள். புகழ்பெற்ற PS பள்ளி, St.Johns பள்ளி என அனைத்துமே இங்கு தான் அமைந்து உள்ளது. இதுவரை சற்று வெற்றிமாறன் படங்களில் வரும் இடங்களில் பயணித்தவன் இப்போது ஷங்கர், கவுதம் வாசுதேவ் மேனன் போன்றவர்களின் படங்களில் வரும் இடத்திற்கு பயணிக்க போறோம்.. கேட்டவுடன் எனக்கே குதூகலமாக உள்ளது.. முதலில் அது போன்று வரும் இடம் பசுமை வழிச்சாலை. பெயருக்கு ஏற்றார் போல் இடமும் மிகவும் பசுமையாக இருக்கும். நமது தற்போதைய தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் திரு.பன்னீர் செல்வம் முதல் நடிகர் சிவகுமார் இல்லம் என பெரியதலைகள் வாழும் ஒரு இடம் இது.. காலை வேளையில் இங்கு நடைபயிற்சி செய்ய வரும்  பிரபலங்கள் அதிகம் இங்கு... அப்புடியே அடுத்த porshe ஆனா இடம் கோட்டூர்புரம்.. உலகிலேயே மிக பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம் இங்கு தான் இருக்கிறது.. நடந்து செல்லும் தொலைவு தான்.. அடுத்து வருவது கஸ்துரிபாய் நகர்... அடுத்து வருவது கஸ்துரிபாய் நகர்.. அடையாறு பெசன்ட் நகர் என்று சுத்துபவர்கள் என்னை யூஸ் செய்வார்கள். அப்டியே இந்திரா நகர் திருவான்மியூர் என்று IT புல்லிங்கோஸ் எல்லாம் சைட் அடித்துவிட்டு தரமணி பெருங்குடி என்று சுத்திட்டு மலை இறங்கிவிடுவேன்.. அங்கு தான் எங்க பணிமனை இருக்கிறது

வாழ்க்கை நன்று சென்று கொண்டிருந்தது... அப்போது தான் தெற்கு சென்னை மக்கள் ஒரு கோரிக்கை வைத்தார்கள்.

 

அவர்கள் திருவான்மியூர்  வரவேண்டும் என்றால் தாம்பரத்திலிருந்து ரயில் ஏறி கடற்கரை வந்து மறுபடியும் நான் அவர்களை கூட்டிட்டு வரவேண்டும்..இது தலையை சுற்றி மூக்கை தொடுவது போன்று உள்ளது.. இதை அரசு உற்று சிந்தித்தது.. மறுபடியும் ஒரு யோசனை கிளம்பியது அவங்களுக்கு.. என்னை என்னுடயை அண்ணன் காரன் பாதை ஏதாவது ஒன்று வரை நீட்டிப்பு செய்து விட்டால் இந்த பிரச்னை தீர்ந்து விடும் என்று யோசித்தார்கள்.. அவர்கள் என்னை பரங்கிமலை வரை நீட்டிப்பு செய்து விடலாம் என்று யோசித்துள்ளனர்...இது ஒரு நல்ல யோசனை.. இதை செயல்படுத்தினால் சென்னை போன்ற ஒரு பொது போக்குவரத்து வசதி இவ்வுலகத்தில் எங்கும் இருந்திருக்காது...

 

ஆனால் அவர்கள் இதற்கு முன்னாடி உள்ள பிரச்சனைகளை யோசிக்கவில்லை.. இதை இவர்கள் யோசிக்கும்போது சென்னை எங்கும் நெடுநெடு கட்டிடங்கள்.. நிலம் கையகப்படுத்துவது என்பது அசாத்தியமான ஒன்று.. ஆனாலும் முயற்சி செய்தார்கள்.. பல இன்னல்கள், தடைகள், கோர்ட் படி கூட ஏறிவிட்டார்கள். பல தேர்தல்களில் என்னை கண்டிப்பாக ஒரு பகடைக்காயாக பயன்படுத்தி உள்ளனர்.. ஆனால் யாரும் எதுவும் செய்யமுடியவில்லை... ஒரு சிறிய தொலைவு தான்.. நான் கல்லூரிகளில் ஏற்றி விட்ட மாணவர்கள் வேலைக்கு பொய் கல்யாணம் ஆகி குழந்தை கூட பிறந்து விட்டது.. ஆனால் இன்றளவும் என்னுடைய பரங்கிமலை பிரச்சனை தீரவில்லை... ஏதோ இன்று வந்துரும் நாளை வந்துரும் என்று மனதை தேற்றிக்கொண்டு இருக்கிறேன்.........

Vadivelu Funny Face Photos - Funny PNG