வச்சக்குறி தப்பாது 10

10
அதிபரின் காரை பைனாக்குலரால் உற்றுப்பார்த்த அதிகாரி பெரும் அதிர்ச்சி அடைந்தார். காரணம், காரின் முன்புறமும், பின்புறமும் ஏராளமான ஆட்கள் அமர்ந்திருக்க, அவர்கள் கைகளில் அதிநவீன இயந்திர துப்பாக்கிகள் இருந்தன.

அதிபர் இடி அமீனின் காரை பொருத்த வரையில், அவருக்கு நம்பிக்கையான ஓட்டுநர் மட்டும்தான் இருப்பார். முன்புற சீட்டில் அவர் அமர்ந்திருப்பார். அவரது காரில் வேறுயாரும் இருக்க மாட்டார்கள்.

ஆனால், வந்து கொண்டிருந்த மெர்சிடஸ் காரில் முன்புறம், பின்புறம் என கார் முழுவதும் நிரம்பியிருந்தார்கள்.

வருவது எதிரிகள் என்று உணர்ந்து, உடனடியாக அவர் துப்பாக்கியால் வாகனத்தில் வந்து கொண்டிருந்த வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். அபாய சங்கையும் ஒலிக்கச் செய்தார். அதற்குள் யோனாதனின் ஜீப் கோபுரத்தை நெருங்கிவிட்டது.

ஒரு சில நிமிடங்களில் அவர் தெரிந்து கொண்டார். பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்தவருக்கு, தாங்கள் எதிரிகள் என்று தெரிந்துவிட்டது, அதனால் சுட ஆரம்பித்துள்ளார் என்று. அவர் எப்படி தெரிந்து கொண்டார் என்று ஆராய்ச்சியில் ஈடுபட எல்லாம் நேரம் இல்லை.

தன்னிடம் இருந்த அதிநவீன பைனாக்குலர் துப்பாக்கியால் அவரை ஒரே குண்டில் வீழ்த்தினார்.

ஜீப்களும், காரும் நின்ற விநாடியில் பின்னால் வந்து கொண்டிருந்த ஜீப்பில் இருந்தவர்களை கட்டுப்பாட்டு கோபுரத்தின் மேல் நோக்கி போகுமாறு உத்தரவிட்டு, தன்னுடன் வந்த வீரர்களை மட்டும் அழைத்து கொண்டு பயணிகள் வைக்கப்பட்டிருந்த ஹாலுக்கு ஓடினார் யோனாதன்.

நள்ளிரவு நேரம் என்பதால், அபாயச் சங்கு ஒலிக்கப்பட்டும் பலர் தூக்க கலக்கத்திலயே எழ ஆரம்பித்திருந்தனர்.

உள்ளே நுழைந்த அடுத்த விநாடி, ‘‘நாங்கள் இஸ்ரேல் வீரர்கள். அவர்கள் எங்கிருக்கிறார்கள்? எல்லோரும் தரையில் படுங்கள்’’ என்று ஹீப்ரூ மொழியில் யோனாதன் உரக்க கூறினார்.

தூக்கக் கலக்கத்திலும் அபாயத்தையும், வீரர்களின் சமயோஜிதத்தை புரிந்து கொண்ட பயணிகள் அப்படியே பின்னந்தலையில் கைவைத்தபடி தரையில் படுத்துக் கொண்டு, தீவிரவாதிகள் இருந்த அறையை காட்டினர்.
அவர்களில் 3 பேர் மட்டும், ‘‘நாங்கள் உயிர் பிழைக்கப்போகிறோம்….’’’ என்று நின்றபடி உற்சாக மிகுதியில் கத்த ஆரம்பித்தனர்.

அவர்கள் ஆர்வ மிகுதியால் கத்துகிறார்கள் என்பதை ஒரு சில விநாடிகளில் அறிந்து கொண்ட யோனாதன், அவர்களை சுட வேண்டாம் என்பதுபோல் பின்பக்கம் இருந்த வீரர்களுக்கு கை காட்டுவதற்கு, அதிரடி வீரர்கள் நின்று கொண்டிருந்த 3 பேரையும் சுட்டனர். குண்டடிப்பட்ட அவர்கள் பொத், பொத்தென்று தரையில் வீழ்ந்தனர்.

தலையில் அடித்துக் கொண்டு, அவசரப்பட வேண்டாம் என்பதுபோல் கூறிவிட்டு, அடுத்த அறைக்கு முன்னேறினார்.

தீவிரவாதிகள் இருந்த அறைக்கு ஓட ஆரம்பித்து கொண்டிருந்தபோது, அந்த அறையில் இருந்து கைத்துப்பாக்கியுடன் ஒற்றைநாடி ஆசாமிதான் முதலில் எதிர்பட்டான்.

யோனாதனின் பின்னால் வந்து கொண்டிருந்த ராப், சரியாக ஒற்றைநாடியின் நெற்றிப்பொட்டை நோக்கி சுட்டார். துப்பாக்கியை நீட்டியபடியே தரையில் வீழ்ந்தான் ஒற்றைநாடி ஆசாமி. அடுத்தது பின்னால் வந்துக் கொண்டிருந்த ஸ்டெபி.

அடுத்த விநாடி அந்த அறையை சுற்றி வளைத்த வீரர்கள், கைகளில் ஏற்கனவே தயாராக வைத்திருந்த கண்ணீர்ப்புகை குண்டுகளை உள்ளே வீசி எறிந்து கொண்டே முன்னேறினர்.

துப்பாக்கி குண்டுகளுக்கு இடையே, அடுத்தடுத்த விமானங்கள் அங்கு வந்து தரையிறங்கி வீரர்கள் ஓடி வந்து கொண்டிருந்தனர்.

தீவிரவாதிகள் அறையில் நுழைந்த வீரர்கள் அங்கிருந்த 3 பேரை சரமாரியாக சுட்டுக் கொன்றனர்.

அந்த அறையில் வேறு யாரும் இல்லை. மீண்டும் பயணிகள் இருந்த ஹாலுக்கு வந்தனர்.

அப்போது, படுத்திருந்த பயணி ஒருவர் ஜோய்ஷை நோக்கி தனது அருகில் படுத்திருந்த ஒருவரை நோக்கி கண்காட்டினார்.

உடனடியாக அவரை பார்த்தபோது, அவனது ஷூவின் சாக்ஸ் பகுதியில் துப்பாக்கி தெரிந்தது. தனது பக்கத்தில் படுத்திருந்தவர் தன்னை காட்டிக் கொடுத்துவிட்டார் என்பதை தெரிந்ததும், அந்த நபர் உடனடியாக சாக்சில் வைத்திருந்த துப்பாக்கியை எடுக்க முயன்றார்.

ஆனால், கண் இமைக்கும் நேரத்தில் அவரது நெஞ்சில் குண்டை பாய்ச்சினார் ஜோய்ஷ். ஆனாலும், அந்த ஆசாமி கஷ்டப்பட்டு திரும்பி துப்பாக்கியை இயக்க முயன்றான். அடுத்த விநாடியில் இன்னொரு குண்டு அவனது மார்பை துளைத்தது. அப்படியே சரிந்தான். அவன் சாக்ஸ் ஆசாமி.

மொசாத் கொடுத்திருந்த தகவல் பிரகாரம் தீவிரவாதிகள் மொத்தம் 7 பேர். இதுவரை 5 பேரை சுட்டுக் கொன்றாகிவிட்டது. யோனாதன் மனதில் கணக்குகள் ஓடிக் கொண்டிருந்தது.

அவர் 2 வீரர்களை மட்டும் அங்கிருக்குமாறு பணித்துவிட்டு, அடுத்தடுத்து அறைகளில் தேட ஆரம்பித்தார்.

வெளியேயும் சரமாரியாக குண்டுகள் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

யோனாதன் பின்னால் வந்த குழுவினர் பயணிகள் தங்கியிருந்த அறைக்கு அருகில் இருந்த மற்றொரு பெரிய அறைக்கு சென்றுபோது அங்கு தூக்க கலக்கத்தில் இருந்த உகாண்டா ராணுவ வீரர்கள், வந்தது யாரென்று தெரியாமலும், சாதாரண துப்பாக்கிகளை வைத்து கொண்டு போராடவும் முடியாமல் அடுத்தடுத்து குண்டடி வாங்கி, உயிரை விட்டனர்.

பயணிகள் தங்கியிருந்த அறைக்கு மேலே சென்றபோது, எங்கிருந்தோ பாய்ந்து வந்த குண்டு ஒன்று ராப்பின் கையை கிழித்து கொண்டு பறந்தது.

அவர் வலியில் அலறினார். கையில் இருந்த துப்பாக்கியை தவறவிட்டார்.

குண்டு பாய்ந்துவந்த திசையை உணர்ந்த ஜோய்ஷூம், யோனாதனும், அங்கிருந்த அறையை நோக்கி சரமாரியாக குண்டுகளை பாய்ச்சினர். ஒருவன் வீழ்ந்தான். மற்றொருவன் ஜன்னல் வழியாக தப்பிக்க முயன்று கொண்டிருந்தான். அவனையும் வீழ்த்தினர். அவனது பின்பக்கத்தில் மட்டும் 18 குண்டுகள் பாய்ந்திருந்தன. அந்த குட்டை ஆசாமி வாய்ந்த பிளந்தபடி இறந்து கிடந்தான். வாசலில் குண்டடிப்பட்டு இறந்து கிடந்தது டிசர்ட் ஆசாமி.

‘‘ஆல் கிளியர்….’’ கட்டை விரலை உயர்த்தியபடி, ரேடியோ வீரருக்கு கைக்காட்டினார் யோனாதன்.

அவர் உடனடியாக, இஸ்ரேலில் இருந்த குடி ஆடம் மற்றும் டேன் சோம்ரானுக்கு ரேடியோவில், ‘‘சார் தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர். நாங்க முன்னேறிக்கிட்டு இருக்கோம்….’’ என்று செய்தியை தெரிவித்தார்.

‘‘செக் ஆல்’’ என்று நாலாபுறமும் சுட்டு விரலை நீட்டி காட்டியபடி கீழே இறங்க ஆரம்பித்தார். வீரர்கள் நாலாபுறமும் யாரும் இருக்கிறார்களா என்று தேட ஆரம்பித்தனர்.

பயணிகள் அறையில் நின்றிருந்த யோனாதனிடம் வந்த ஒரு வீரர், ‘‘ஆல் கிளியர் சார்….’’ என்று விரைப்பாக பதில் கூறினார்.

யோனாதனின் முகத்தில் ஒரு சின்ன புன்முறுவல் கீற்று தெரிந்தது.

அடுத்த விநாடியே அவர் வெளியே நிலையை தெரிந்து கொள்ள விரைந்தார்.

பயணிகள் அறையை விட்டு வெளியே வந்தபோது, கோபுரத்தில் இருந்து உகாண்டா வீரர் ஒருவர் சுட்டுக் கொண்டிருந்தது தெரிந்தது.

ஒரு விநாடியை 8 பாகங்களாக பிரித்து பார்க்கிறது நம் கண்கள் என்பார்கள். அந்த 8 பாக நேரத்தில் ஒரு பாகத்தில் அவர் கோபுரத்தை பார்த்தபோது, தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஜோய்ஷை நோக்கி அந்த வீரர் குறிபார்த்து கொண்டிருப்பது தெரிந்தது.

அந்த 8 பாக நேரத்தில் 6 பாக நேரத்தில் அவர் முன்னால் சென்று கொணடிருந்த ஜோய்ஷை கீழே தள்ளிவிட்டார். அந்த நேரத்தில் மேலே இருந்து உகாண்டா வீரர் சுட்ட குண்டு அவரது மார்பை துளைக்க சரியாக இருந்தது. அப்படியே கீழே சரிந்தார் யோனாதன்.

யோனாதன் கீழே சரிந்ததை பார்த்த, பின்னால் வந்து கொண்டிருந்த ராப், கட்டுப்பாட்டு கோபுரத்தில் இருந்து சுடப்படுவதை உணர்ந்து தன்னிடம் இருந்த ராக்கெட் குண்டினால் அதை நோக்கி சுட்டார்.

தீபாவளி அணுகுண்டு வெடித்தால், எப்படி ஒரு நெருப்பு பந்து உருவாகி மறையுமோ அதைப்போன்று விமானக் கட்டுப்பாட்டு கோபுரம் நெருப்புக் குழம்பில், தூள், தூளானது.

கீழே சரிந்து கிடந்த யோனாதனை தூக்கி மடியில் போட்டுக் கொண்டார் ராப்.

தனக்காக நெஞ்சில் குண்டுவாங்கி சரிந்து கிடந்த யோனாதனை பார்த்தபோது, ஜோய்ஷூக்கு கண்ணில் நீர் பொத்துக் கொண்டுவந்தது.

‘‘சார் எனக்காக உங்கள் உயிரையே தரப்போகிறீர்களே…..’’ கதறினார் ராப்.

‘‘ராப் முதலில் கண்ணில் நீரை துடை. ஆகவேண்டியதை பார்….. பயணிகளை விமானத்தில் ஏற்ற கிளியரன்ஸ் செய்’’ விழுந்து கிடந்த நிலையிலும் உத்தரவுகளை பிறப்பித்தார் யோனாதன்.

அங்கிருந்து செல்ல மனமில்லாமல் எழுந்து, கோபுரத்தை நோக்கி சரமாரியாக சுட்டார் இளம்வீர்ர் ஜோய்ஷ். அந்த கோபுரத்திலேயே சுட்டுக் கொண்டே மேலே சென்றார்.

கீழே கிடந்த யோனாதனை இன்னமும் மடியில் போட்டுக் கொண்டிருந்தார் ராப்.

‘‘சின்னப்பையன்…. ஆக்ரோஷமாயிட்டான்’’ யோனாதன் ஜோய்ஷை குறிப்பிட்டு பேசினார்.

‘‘சார்…. நாம மொதல்ல விமானத்துக்கு போயிடலாம். அங்க வச்சு டாக்டர் குழுவினர் உங்களுக்கு சிகிச்சை அளிப்பாங்க சார்… வாங்க….’’ அழைத்தார் ராப்.

‘‘ராப்…. நீங்களும் என்ன சாதாரண மனிதர் மாதிரி உணர்ச்சிவசப்பட ஆரம்பிச்சிட்டீங்க…. குண்டு பாய்ந்திருக்கிறது என்னோட மார்பில இதை வெளியே எடுக்கிறது ஆப்ரேஷன் தியேட்டர்ல கூட கஷ்டம். பர்ஸ்ட் எய்ட் எல்லாம் இப்போ வேலைக்கு ஆகாது. என் உயிர் போகப்போறது நிச்சயம். ஆனா, இருக்கின்ற வரையில ஆப்ரேஷன சக்ஸஸ்புல்லா முடிக்கணும்னு நினைக்கிறேன்’’

ரேடியோ வீரர், யோனாதன் குண்டடிப்பட்டு விழுந்ததை, டெல் அவிவ்வில் இருந்த டேன் சோம்ரானிடம் கூறியபோது, அவரது கண்ணிலும் கண்ணீர் வழிந்தது. ஆனால் அடக்கிக் கொண்டார்.

யோனாதனை சற்று பாதுகாப்பான இடத்தில் தூக்கிச் சென்று மடியில் வைத்திருந்தார் ராப்.

அங்கு ஒரு வீரர் ஓடிவந்து விரைப்பாக நின்றார். ‘‘சார் கிரவுண்ட் கிளியர். மாடியில மட்டும் 2 பேர் இருக்காங்க… பட் அவங்க வெளியே வர முடியாத அளவுக்கு வீரர்கள் சுற்றி வளைச்சிட்டாங்க…. சில நிமிடங்கள்ல அவங்களோட கதை முடிஞ்சிடும் சார்’’ வந்த வீரர் கூறினார்.

‘‘ஓகே. பயணிகளை விமானத்துக்கு கூட்டிட்டு போங்க….’’ உத்தரவிட்டார் யோனாதன்.

பயணிகள் அவசர, அவசரமாக விமானத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மாடியில் இருந்து அனைத்து வீரர்களையும் கொன்ற மகிழ்ச்சியில் வீரர்கள் அனைவரும் கீழே இறங்கி வந்தபோது, யோனாதன் குண்டடிப்பட்டு விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும், அவர்களை அங்கே நிற்க விடாமல் பாதுகாப்பு பணியில் சுற்றி வளைக்குமாறு ராப்பிடம் கூறினார்.

ராப் அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்க, அடுத்தடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பயணிகள் அனைவரும் ஏற்றப்பட்டது தெரிவிக்கப்பட்டதும், ஜீப் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு, அதில் யோனாதன் ஏற்றப்பட்டு விமானத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.

யோனாதன் ஏற்றப்பட்டவுடன் விமானத்தின் கதவு மூடப்பட்டு, முதல் விமானம் கிளம்பியது. அதைத் தொடர்ந்து 2 விமானங்கள் புறப்பட்டு சென்றன.

மூன்றாவது விமானத்தில் அதிரடிப்படை வீரர்கள் ஏற ஆரம்பித்தனர். அப்போது அங்கு வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த உகாண்டா நாட்டு விமானங்களை ராக்கெட் குண்டுகளால் வீரர்கள் சிதறடித்தனர். சின்னதும், பெரியதுமாக சுமார் 30 விமானங்கள் தீக்கிரையாகின. தங்களை யாரும் பின்தொடரக்கூடாது என்ற முன்னேற்பாட்டில் வீரர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கடைசி போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஜோய்ஷ், கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் விமானத்தில் ஏறினார்.

விமானத்தில் கதவு மூடப்பட்டு விமானம் மேலே எழும்பிய அடுத்த விநாடி, ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஓடுதளத்தில் விமானங்கள் இறங்க வழிகாட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த விளக்குகளில் இருந்து வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதனால் ஓடுபாதை சேதம் ஆனதுடன், விளக்குகள் அனைத்தும் அணைந்து, அங்கு இருள் சூழ்ந்தது.

முதல் விமானத்தில் பயணிகள் அனைவரும் நிம்மதி பெருமூச்சுடனும், உயிர் பிழைத்த மகிழ்ச்சியுடனும் இருந்தனர்.

ஆனால், படுக்கையில் வைக்கப்பட்டிருந்த யோனாதன் கண்கள் சொருகிக் கொண்டிருந்தன. அருகில் இருந்த ராப் அவரது கை விரல்களை அழுத்தமாக கைப்பற்றியிருந்தார். அவர் ஏதோ சொல்ல வருவதை போல் இருந்ததை தொடர்ந்து, அவரது முகத்துக்கு அருகில் சென்றார்.

‘‘வீரர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை சொல்லுங்க. ஜோய்ஷை வருத்தப்படாதேன்னு சொல்லச் சொன்னதா சொல்லுங்க. எல்லோருக்கும் நன்றி. நான் போகிறன். பை…….’’ சொல்லி முடிப்பதற்குள் அவரது தலை சாய்ந்தது.

அருகில் இருந்த டாக்டர்கள், அவரது நாடியை பிடித்து பார்த்தனர். அதில் நாடி இல்லை. உயிர் பிரிந்திருந்தது. வீரர்கள் மட்டுமின்றி, பயணிகளின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. வீரர்கள் விரைப்பாக நின்று அவருக்கு சல்யூட் அடித்தனர்.
===========================
பின்குறிப்பு: இந்த கதை இஸ்ரேலில் உண்மையாகவே நடந்த சம்பவம். இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களும் ஒரு சிலரை தவிர பெரும்பாலானவர்களின் பெயர்களும் உண்மையே. இந்த சம்பவத்துக்கு பின்னர் உகாண்டா அதிபர் இடி அமீன் கடும் கோபம் அடைந்தார். தங்கள் நாட்டிற்கே வந்து இஸ்ரேல் வீரர்கள் தாக்குதல் நடத்தி பிணைக் கைதிகளை மீட்டுச் சென்றது மட்டுமல்லாமல், 49 வீரர்கள், 30 போர் விமானங்களை துவம்சம் செய்தது குறித்து ஐ.நா. சபையில் விவகாரத்தை கிளப்பினார். மேலும், இந்த தாக்குதலில் இஸ்ரேல் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் விவகாரத்தில் உதவி செய்தது கென்யா நாட்டு அமைச்சர் மெக்கன்சிதான் என்பதை அறிந்து அவரை கொல்ல உளவுப்படைக்கு உத்தரவிட்டடார். அவர்கள் மெக்கன்சி சென்ற விமானத்தில் குண்டு வைத்து, அவரை படுகொலை செய்தார். ஆனால், பிணைக் கைதிகள் விஷயத்தில் தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு பயப்படாமல் அதிரடி நடவடிக்கை மூலம் அவர்களின் உயிரை காப்பாற்றிய இஸ்ரேலின் நடவடிக்கை இன்றளவும் சரித்திரத்தில் பேசப்படுகிறது. நன்றி. ஜே.எஸ்.கே.பாலகுமார்.

என்ன நண்பர்களே ஒரு சரித்திரத்தை கதையாக படித்ததில் திருப்தி இருக்கிறதா? மனதிற்கு பிடித்திருந்தால் இரண்டு வரி விமர்ச்சனம் போட மறந்துடாதீங்க.

No comments:

Post a Comment

Thanks