வச்சக்குறி தப்பாது 7


7

ஜூலை 1, 1976

சூரியன் கீழ்வானில் இருந்து கிளம்பி 6 மணி நேரம் ஆகியிருந்தது. இஸ்ரேலை சுட்டு பொசுக்கிக் கொண்டிருந்தது வெயில்.

டிரிங்…. டிரிங்…. டிரிங்….


பிரதமர் அலுவலகத்தில் போன் அலறியது.

அலுவலக ஊழியர் எடுத்து பேசினார். மறுமுனையில், ‘‘நான் அமைச்சர் சிமன் பெரஸ் பேசுறேன். பிரதமர்கிட்ட உடனடியாக இணைப்பு கொடுங்க’’

சில நொடிகள் மவுனமாக கலைந்த பின்னர், மறுமுனையில் பிரதமர் வந்தார்.

‘‘சொல்லுங்க சிமன் பெரஸ்’’

‘‘சார் அடுத்தக்கட்ட முன்னேற்றம் ஏற்பட்டிருக்கு. தீவிரவாதிகள் இஸ்ரேலியர் அல்லாத 100 பேரை விடுவிச்சிருக்காங்க…. இப்போ அவங்கிட்ட இருக்கிறது 106 பேர். இதில் விமானிகள் குழுவினரும் அடக்கம். அவங்களோட ஒரே குறி, இஸ்ரேலியர்கள் மட்டும்தான் என்கிறது நல்லா தெரியுது. அவங்க சரியா திட்டம் போட்டு கடத்தியிருக்காங்க…’’

‘‘உகாண்டா அதிபர் இடி அமீன் கிட்ட நானே பல தடவை பேசிட்டேன். அவர் தீவிரவாதிகள் ஆதரவு நிலையை எடுத்திட்டது நல்லாவே தெரியுது. தீவிரவாதிங்க என்ன வேண்டுமானாலும் செய்வாங்க… எதுக்கு வம்பு…. அவங்க கேட்கிறதை செஞ்சிடுங்களேன்னுதான் இடி அமீன் என்கிட்டேயே சொல்றார்’’ என்றார் பிரதமர்.

‘‘அவங்களுக்கு நம்ம வழிதான் கரெக்ட் சார்… இடி அமீனுக்கும் காலாகாலத்துக்கும் அது பாடமா அமையும்… உலகத்தோட பார்வையில நாம யாருன்னு காட்டுறதுக்கு  ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு… இனிமே எவனும் நம்மோட மக்களை தொடவேக்கூடாதுன்னு பயப்படனும்…. அப்படி ஒரு பாடத்தை அவங்களுக்கு கற்பிக்கணும்…. அதுக்கு நம்ம ரூட்தான் சரி….’’ கடுமையான குரலில் கூறினார் சிமன் பெரஸ்.

‘‘விடுவிச்சவங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிட்டாங்களா?’’ கேட்டார் பிரதமர்.

‘‘யெஸ் சார்…. அவங்க எல்லாரையும் பாரீஸ் அனுப்பி இருக்காங்க….’’

‘‘ஏற்கனவே நேத்து விடுவிச்ச பயணிகள்கிட்ட இருந்து தீவிரவாதிகள் பற்றிய முழு தகவல்களையும் நம்ம மொசாத் சேகரிச்சிடிச்சு. அதை வச்சி ஆக்‌ஷன் பிளான் ரெடியாகிட்டு இருக்கு. இன்னைக்கு பைனல் பண்ணிடுவோம்… இன்னைக்கு ஈவ்னிங் மறுபடியும் உங்களை தொடர்பு கொள்கிறேன்….’’

‘‘ஓ.கே. குட்… இடி அமீன் கிட்ட எங்களுக்கு 4ம் தேதி வரை அவகாசம் வேணும்னு தீவிரவாதிகள்கிட்ட பேசுமாறு கூறியிருக்கிறேன். பேசுறேன்னு சொல்லியிருக்கார்…. அந்தாள் நம்மளை ரொம்பவும் பகைச்சுக்கக் கூடாதுன்னு பாதி நாளாவது வாங்கித்தர பார்ப்பார். அதுக்குள்ள நாம தயாராகணும்…’’

‘‘கட்டாயம் சார்…. அந்த அவகாசத்துக்குள்ள நாம தயாராகிடலாம்’’

‘‘நம்ம டீம் அதிரடி ஆக்‌ஷன்ல இறங்கப்போற விமானங்கள் தொடர்ந்து பறக்கிறதுக்காக எரிபொருள் நிரப்புறது தொடர்பா…. கென்யா அதிபர்கிட்ட அந்நாட்டு அமைச்சர் புரூஸ் மெக்கன்சி பேசிட்டு இருக்கார். நிச்சயம் சாதகமான பதிலா இருக்கும்னு சொல்லியிருக்கார். அதை மனசுல வச்சிட்டுத்தான், எங்களுக்கு 4ம் தேதி வரைக்கும் அவகாசம் வாங்கிக் கொடுங்கன்னு இடி அமீன்கிட்ட கேட்டேன். தீவிரவாதிகள்கிட்ட பேசுறதா சொல்லியிருக்கார்’’

‘‘ஓகே சார்….’’

‘‘ஆக்‌ஷன் பிளான்ல எந்த சிக்கலும் இல்லாம பக்கவா ரெடி ஆகிக்கோங்க… கென்யா கிட்ட இருந்து கிரீன் சிக்னல் வந்த அடுத்த விநாடி நம்ம ஆட்கள் செயல்ல இறங்க வேண்டியிருக்கும்’’

‘‘நம்ம பாய்ஸ் பக்காவா இருக்காங்க சார்….’’

சிமன் பெரஸ் அலுவலகத்தில், போனில் பேசிக் கொண்டிருந்த அவரிடம் ஊழியர் ஒருவர் வந்து, ‘‘சார்… உங்களுக்கு டேன் சோம்ரான்கிட்ட இருந்து போன்’’ என்றார்.

சரி என்பதுபோல் அவரிடம் தலையாட்டிவிட்டு, அடுத்த முனையி்ல் இருந்த பிரதமரிடம், ‘‘சார் டேன் சோம்ரான் பேசுறார். முக்கியமான விஷயமாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்….’’  என்று பிரதமரிடம் கூறினார் சிமன் பெரஸ்

‘‘நான் லைன்லேயே காத்திருக்கிறேன். நீங்க பேசுங்க…..’’ பிரதமர் கூறினார்.

வந்த ஊழியரிடம் அடுத்த போனில் இணைப்பு கொடுக்குமாறு சைகையில் உத்தரவிட்டார் சிமன் பெரஸ்.

அந்த ஊழியர் வெளியேறிய அடுத்த விநாடி, மேஜையில் இருந்த இன்னொரு போன் ஒலித்தது.

‘சொல்லுங்க…. டேன்’’

‘‘……’’

‘‘ஓ.கே…. ம்….ம்….’’

‘‘……’’

‘‘ஓ.கே. டேன். வச்சிடுறேன்’’ என்று கூறிவிட்டு, பிரதமர் லைனில் இருந்த அடுத்த போனை எடுத்து, ‘‘சார்….’’ என்றார்.
‘என்ன சொல்றார்….’’ எனக்கேட்டார் பிரதமர்.

‘‘சார்… தீவிரவாதிகள்கிட்ட இடி அமீன் பேசிட்டார்னு நினைக்கிறேன். அவங்க நம்மோட கோரிக்கையை ஏத்துக்கிட்டு 4ம் தேதி வரை அவகாசம் குடுத்திருக்காங்க….’’

‘‘குட். ஆனா…. விஷயம் கொஞ்சமும் லீக் ஆகாம பார்த்துக்கோங்க…. விரைவில் உங்களுக்கு நல்ல தகவல் வரும்’’

‘‘ஓ.கே…சார்…’’
‘‘மறுபடியும் நாம பேசுவோம’’ என்றுக்கூறி இணைப்பை துண்டித்தார் பிரதமர்.

---------

எண்டபே.

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம்.

புகைப்பிடித்து கொண்டிருந்த ஒற்றைநாடி. தனது சகாவுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தான்.

‘‘டெல் அவி்வ் கோர்ட்ல நம்ம ஆளுங்களை விடுவிக்கிறது தொடர்பாக அரசாங்கம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செஞ்சிருக்கு. அது உண்மைதான்னு நம்ம ஆட்கள் உறுதிப்படுத்திக் இருக்காங்க….’’ என்றான் ஒற்றைநாடி.

‘‘அதிபர் இடி அமீன்…. மொரீஷியஸ்ல நடக்கிற கூட்டத்துக்கு போறாராம். அதனால இஸ்ரேல் கேட்கிற மாதிரி, கெடுவை 4ம் தேதி வரை நீட்டிச்சிடுங்கன்னு சொல்லியிருக்கார். நான் இல்லாதப்போ எந்த சிக்கலும் வேண்டாம்னு அவர் சொல்லியிருக்கார். அதை தலைவர்கிட்ட சொன்னேன். அவரும் ஓ.கே. சொல்லிட்டார்….’’

‘‘அதனால இஸ்ரேலுக்கு தகவல் சொல்லிட்டேன். ஆனா, இப்படி அவங்க…. இழுத்த இழுப்புக்கு எல்லாம் இறங்கிப்போறது தப்புன்னு என் உள்ள மனசுக்குப்படுது….’’ என்ற ஒற்றைநாடியின் குரல் சற்று இறங்கியிருந்தது.

‘‘விடுங்க தோழரே… எல்லாம் நன்மைக்கேன்னு நினைப்போம்….’’ ஆறுதல் கூறினார் நண்பர்.

ஆனால், காலம் வேறு மாதிரி கணக்கு போட்டுக் கொண்டிருந்தது.

ஓய்வு இல்லாமல் தொடர்ந்து கூட்டங்கள், ஆலோசனைகள் என்று ஈடுபட்டிருந்த சிமன் பெரஸ், வீட்டில் சாப்பிடுவதற்காக அமர்ந்தபோது மீண்டும் ராணுவ தலைமையகத்தில் இருந்து போன் வந்தது. அவசரமாக எழுந்து சென்று அதில் பேசினார்.

பின்னர் தட்டில் பாதி சாப்பிட்டு வைத்திருந்த பிரட்டில் ஒரு கடி கடித்துவிட்டு அப்படியே வைத்துவிட்டு நகர்ந்தார்.


‘‘ஹனி… சாப்பிட்டுதான் போங்களேன்…. இப்படி ஓய்வு இல்லாமல் சுத்திட்டு இருந்தா….. மூளைக்கூட வேலை பார்க்காது’’ என்று மனைவி கடிந்து கொண்டாள்.

‘‘நோ…. டார்லிங்… பிரச்னை முடிஞ்ச பிறகு உன்னோட அமர்ந்து ஷாம்பெயினே சாப்பிடுறேன்….. சாரி டார்லிங் நான் வர்றேன்’’ என்று மனைவியின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் ராணுவ தலைமையகத்துக்கு கிளம்பினார் சிமன் பெரஸ்.

------------

ராணுவ தலைமையக போர் வியூக அலுவலகம்.

மூடப்பட்டிருந்த ஏசி அறையில் மொசாத் தலைவர், விமானப்படை மற்றும் ராணுவ அதிகாரிகள் தயாராக இருந்தனர்.

சிமன் பெரஸ் வந்தவுடன், ராணுவ மிடுக்குடன் அவருக்கு அதிகாரிகள் ஒரு சல்யூட் வைத்தனர்.

‘‘சார்…. பிளான் ரெடி….’’ என்றார் விமானப்படை மூத்த அதிகாரி பேசினார்.

‘‘சரி சொல்லுங்க….’’ என்று கன்னனத்தில் கைவைத்தபடி, மேப்பை வைத்து அவர் கூறப்போவதை கேட்க தயாரானார் சிமன் பெரஸ்.

‘‘ஜென்டில்மேன்…. இந்த ஆப்ரேஷன்ல நாம ஈடுபடுத்தப்போறது லாக்ஹீட் 130 ஹெர்குலஸ் ரக விமானம். இது சாதாரணமாக சொன்னா, 4 லாரி சைஸ் அளவுக்கு பெரிய விமானம்’’

‘‘இந்த விமானங்கள் மொத்தம் 4ஐ பயன்படுத்தப்போறோம். இதில் மொத்தம் 100 அதிரடிப்படை வீரர்களை அனுப்பப் போறோம்….. இவர்கள் அனைவருமே எல்லா வகையான ஆயுதங்களையும் கையாளும் திறன் படைச்சவங்க…. அதேசமயம் குறிபார்த்து சுடவும், சமயோஜிதமாக செயல்படவும் பயிற்சியும் பெற்றவங்க…. இந்த 100 வீரர்களும் 4 பிரிவா பிரிக்கப்படுவாங்க… முதல் விமானத்தில செல்லும் முதல் பிரிவு வீரர்கள், விமானம் தரையிறங்கிய உடனேயே ஓடுபாதையை நமது கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்து, அங்கே மத்த விமானங்கள் தரையிறங்குவதற்கான விளக்குகளை பொருத்துவாங்க….. ஓடுபாதையில தடைகள் இருந்தாலும், அவங்க நீக்குவாங்க….’’

‘‘ஓடுபாதையில எதற்கு விளக்குகளை பொருத்தணும்? அதுல நேரம் வீணாகாதா?’’ குறுக்கிட்டு கேட்டார் சிமன் பெரஸ்.

‘‘நல்ல கேள்வி. நம்முடைய விமானத்தை அடையாளம் கண்டுபிடிச்சிட்டாங்கன்னா…… விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில இருக்கிறவங்க, விமானம் தொடர்ந்து செல்ல முடியாதபடி, ஓடுபாதையில இருக்கிற விளக்குகளை அணைச்சுடுவாங்க…. இது நம்ம வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதுடன், பின்னால வர்ற மத்த விமானங்களும் தரையிறங்க முடியாம போயிடும்…..’’
‘‘சபாஷ்….. நல்லா பிளான் பண்ணியிருக்கீங்க….’’ பாராட்டினார் சிமன் பெரஸ்.
‘‘அடுத்ததா… முதல் விமானம், தரையிறங்கின ஒரு சில நிமிடத்தில இரண்டாவது விமானம் தரையிறங்கும். அதில உகாண்டா அதிபர் இடி அமீன் பயன்படுத்துற மாதிரியான மெர்சிடஸ் கார் மற்றும் பாதுகாப்பு கார்கள் இருக்கும். அவற்றில் உகாண்டா நாட்டு கொடியும் பொருத்தப்பட்டிருக்கும். முதல் விமானம் வந்தவுடனேயே உகாண்டா வீரர்கள் சற்று திகைச்சு நின்னுயிருப்பாங்க.... ஆனா, முதல் விமானத்தில இருக்கும் வீரர்கள், உகாண்டா ராணுவ உடையில ஓடுபாதையில பாதுகாப்புக்கு நிற்கிற மாதிரி நிற்பதால அவங்களுக்கு குழப்பம் ஏற்படும். அடுத்ததா இரண்டாவது விமானம் வந்து இறங்கி….. அதில இருந்து அதிபர் பயன்படுத்தும் கார் இறங்கும்போது, தங்கள் நாட்டு அதிபர்தான் வருகிறார் என்று அவர்களை நம்ப வைக்கப்போகிறோம். அதுக்காகவே…… இடி அமீன் எப்போதும் பயன்படுத்தும் கருப்பு நிற மெர்சிடஸ் கார், பாதுகாப்பு கார்களை போன்றே தயார் செஞ்சிருக்கோம்’’

‘‘வெரிகுட் பிளான்….. கே அஹெட்….’’ என்றார் சிமன் பெரஸ்.

‘‘அந்த கார்கள்ல பலமான ஆயுதங்களுடன் நம்ம வீரர்கள் இருப்பாங்க…. உகாண்டா வீரர்கள் ஒருவேளை நம்மள கண்டுபிடிச்சாலும் உடனடியாக கார்களிலும், ஓடுபாதையில் இருந்து கார்களுடன் ஓடிவரும் வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்துவாங்க…. ஒருவேளை உகாண்டா வீரர்கள் தாக்குதல் நடத்தலைன்னா நேரடியாக நாம பயணிகள் இருக்கிற பகுதிக்கு போய்டலாம்… அங்கு நம்முடைய நடவடிக்கையை தொடரலாம்….’’

‘‘நீங்க சொல்றது சரி, உகாண்டா வீரர்களுக்கும் நம்முடைய வீரர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கே…. மொதல்ல நிறமே காட்டிக் குடுத்துடுமே…. அதுக்கு என்ன பண்ணப்போறீங்க….?’’ கேட்டார் சிமன் பெரஸ்.

‘‘இதுவும் நாங்க முன்னாடியே யோசிச்சிட்ட விஷயம்தான். நம்ம வீரர்கள் சிவப்பா இருக்கிறதால…. அவங்களை பார்த்தவுடனேயே கண்டுபிடிச்சிட வாய்ப்பு இருக்கு…. அதனால… அவங்க ஸ்பெஷல் மேக்கப்ல கருப்பா மாத்திதான் அனுப்ப போறோம்…. இதற்காக ஸ்பெஷல் மேக்கப் டீமும் ரெடியாகி இருக்கு…. அது மட்டுமில்லாம… ஓடுபாதைக்கும் கண்ட்ரோல் டவருக்கும் இடையே இருக்கிற தூரம் கொஞ்சம் அதிகம். அங்கிருந்து டெலஸ்கோப் மூலம் பார்த்தாலும் இருட்டில் ரொம்ப தெளிவா கவனிச்சிட முடியாது…. அதுதவிர அவங்க யோசனையே பண்ணாத அளவுக்கு அடுத்தடுத்து விஷயங்களை நாம களம் இறக்கப்போறாதால, நிச்சயம் கன்ப்யூஸ் ஆவாங்கன்றது மட்டும் நிச்சயம்…. அந்த கேப்ல நாம நம்மோட வேலையை முடிச்சிடுவோம்….’’

‘‘குட் ரொம்ப நல்லாவே யோசிச்சிருக்கீங்க…. கன்டினியூ….’’ என்றார் சிமன் பெரஸ்.

‘‘மூன்றாவது மற்றும் நான்காவது விமானத்தில வர்ற வீரர்கள், விமான நிலையத்தில் இருந்து மீண்டும் நமது விமானம் கிளம்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளை கவனிப்பாங்க…. இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையில 100 அதிரடிப்படை வீரர்கள் ஈடுபட்டாலும், அதில் முதல் அதிரடி தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடப்போவது 29 வீரர்கள் மட்டுமே. இதற்கு லெப்டினென்ட் கலோனல் யோனாதன் நெதன்யாகு தலைமை வகிப்பார். அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துறல பெருமையடைகிறேன்’’ என்று கூறியவாறு பெல்லை அழுத்தினார்.

ராணுவ அதிகாரி யோனாதன் நெதன்யாகு கம்பீரமாக அங்கு வந்து நின்று சல்யூட் அடித்தார்.

(தொடரும் 7)

No comments:

Post a Comment

Thanks