வச்சக்குறி தப்பாது 9


9

அமைச்சரவை அனுமதி கொடுத்த விவகாரம் ராணுவ தலைமையகத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து ‘ஆப்ரேஷன் தண்டர்போல்ட்வீரர்கள் குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எல்லாம் மிகச்சில நிமிடங்களில் நடந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் வீரர்கள் அனைவரும் விமானப்படை தளத்தில் விமானங்கள் முன்பு விரைப்பாக நின்றனர். அனைத்து வீரர்களும் ஆப்ரிக்கர்களை போன்று மேக்கப் போடப்பட்டிருந்ததால், பலருக்கு பக்கத்தில் இருப்பது யார் என்பதே கூட தெரியாத நிலை இருந்தது.

100 பேருக்கு மேக்கப் போட சுமார் 25 ஒப்பனை கலைஞர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களிடம் ஆப்ரிக்கர்களை போன்று வீரர்களை தயார்ப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்ததால், அவர்களாக மிகப்பெரிய மேக்கப் பெட்டிகளை எடுத்து வந்திருந்தனர். அனைவரும் மொசாத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்கள் என்பதால், 3 மணி நேரத்தில் அனைத்து வீரர்களையும் தயார்ப்படுத்தி இருந்தனர்.

விமான கட்டுப்பாட்டு அறையில், டேன் சோம்ரான், யெகுடியேல் குடி ஆடம் ஆகியோர் தரைக்கட்டுப்பாட்டு உத்தரவுகளை கவனிக்க தயாராக இருந்தனர்.

டெல் அவிவ் ராணுவ விமானப்படை தளத்தில் அடுத்தடுத்து 4 லாக்கர்ஹீட் ஹெர்குலஸ் விமானங்கள் பெரிய ராஜாளிக்களாக அணிவகுத்து நின்றன. வீரர்கள் அனைவரும் விமானங்களில் ஏறிக்கொள்ள விமானங்களின் கதவுகள் மூடப்பட்டன.

முதல் விமானத்தில் இருந்த விமானி ஜோஷூவா சானி தரைக்கட்டுப்பாட்டு அறையுடன் பேசினார். ‘‘சார் நாங்க தயார். உங்க உத்தரவுக்காக காத்திருக்கிறோம்…’’ என்றார் விரைப்புடன்.

‘‘ஓகே…. வெற்றியுடன் திரும்பி வாருங்கள். உங்கள் வருகையை நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும்….’’ என்று தரைக்கட்டுப்பாட்டு அறையில் இருந்த குடி ஆடம்தான் உத்தரவு கொடுத்தார்.

‘‘நன்றி சார்…’’ என்று விமானியின் குரலை தொடர்ந்து முதல் விமானம் பறக்க, அடுத்தடுத்து, சில நிமிட இடைவெளியில் மற்ற மூன்று விமானங்களும் அதை தொடர்ந்து பறக்க ஆரம்பித்தன.

விமானப்படை தளத்தில் இருந்து அடிக்கடி விமானங்கள் பறப்பதும், வந்து இறங்குவதும் சாதாரணம் என்பதால், அருகில் வசித்த குடியிருப்பு மக்கள் யாருக்கும் அதைப்பற்றிய சந்தேகம் எதுவும் எழவில்லை.

முதல் விமானத்தில் தலைமை விமானி ஜோஷூவா சானி விமானத்தை செலுத்திக் கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து குறிப்பிட்ட தொலைவில் அடுத்தடுத்த விமானங்கள் பறந்து கொண்டிருந்தன.

‘‘மை டியர் கோ பைலட்ஸ், நம்ம விமானங்களை 200 மீட்டருக்கு மேலே செலுத்த  வேண்டாம்… நாம கடல்பகுதியிலேயே தொடர்ந்து பயணிக்க போகிறோம். எந்த சந்தேகம் வந்தாலும் என்னிடம் கேட்கலாம்....’’ என்று பின்னால் வந்து கொண்டிருந்த விமானிகளுக்கு ஜோஷூவா கட்டளையிட்டார்.

‘‘காப்பி…. சார்’’ என்று மூன்று குரல்கள் கோரசாக மைக்கில் கேட்டன.

‘‘குட்…. இப்போதைக்கு கென்யாவின் ஜோமோ கென்யாட்டா நோக்கி பறக்கிறோம். எந்த இடத்திலும் விமானம் பறக்கும் உயரத்தை கூட்ட வேண்டாம். அதே மாதிரி என்னை கேட்காம யாரும் திசையை மாற்றிச் செல்ல வேண்டாம்’’

‘‘காப்பி….. சார்’’

அதைத் தொடர்ந்து விமானத்தில் இருக்கும் வீரர்களிடம் பேசுவதற்காக அவர் மைக்கை எடுத்தார்.

‘‘வீரர்களே…. நாம நீண்ட தூரம் பயணம் செய்ய இருக்கிறோம். உங்களை டார்க்கெட் பிளேசுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு எங்களுடையது. டார்க்கெட்டுக்கு நாம சென்றடைய சுமார் 9 முதல் 10 மணி நேரம் ஆகும். எங்களால் எவ்வளவு வேகமாக செல்ல முடியுமோ அந்த அளவுக்கு வேகமாக உங்களை கொண்டு சென்று இறக்குவோம். அதுவரை நீங்கள் நன்றாக உறங்கி, ஓய்வு எடுத்து கொள்ளலாம்…. கடினமான உங்கள் பணிக்கு இந்த ஓய்வு உற்சாகமாக செயல்பட உதவும்…. ’’ என்று கூறிவிட்டு மைக்கை அணைத்தார் ஜோஷூவா.

முதல் விமானத்தில் இருந்த யோனாதன் நெதன்யாகு, ஒரு பிரெட் பாக்கெட்டை கிழித்து சாப்பிட ஆரம்பித்தார். அருகில் இருந்தவர்களும் தங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த உணவுப் பொட்டலங்களை திறந்து சாப்பிட ஆரம்பித்தனர்.

தாக்குதலில் ஈடுபடப்போகும் அதிரடிப்படை வீரர்கள் 29 பேரும் முதல் விமானத்தில் இருந்தனர்.

‘‘ஜோய்ஷ் அடுத்தவாரம் உனக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டேனே?’’ என்று இளம் வீரர் ஒருவரை பார்த்து கேட்டார் நெதன்யாகு.

‘‘யெஸ்… சார், என் பள்ளிக் காதலியை மணக்கப் போகிறேன்’’ என்று அந்த வீரர் பதில் கூறினார்.

‘‘ரொம்ப நாளா, உன் பிரண்ட்ஸ்கிட்ட ராணுவத்தில பெரிய ஆளா வரணும்னு சொல்லிட்டு இருந்தியாமே… அதனாலத்தான் இந்த அதிரடிப்படையில நீயா விருப்பப்பட்டு வந்தேன்னும் கேள்விப்பட்டேனே யெங் பாய்….’’

‘‘சார்….’’ என்று விரைப்பாக கூறினார் வீரர்.

‘‘குட்… இந்த ஆப்ரேஷன்ல, உன்னை மாதிரியான இங்கிருக்கும் வீரர்கள் கையிலதான் இருக்கு. இந்த ஆப்ரேஷன் சக்ஸஸ்புல்லா முடிச்சிட்டோம்னா… முதல் பார்ட்டி உன்னோட கல்யாணத்திலதான். எங்களுக்கு ஷாம்பெயின் வேணும்பா…..’’

‘‘சார்… உங்களுக்கு இல்லாமலா…’’

வீரர்கள் அனைவரும் சிரித்தனர்.

‘‘இப்போ சிப்பாய இருக்கிற, நீ அடுத்தவாரத்தில ஒரு குரூப்புக்கு லீடர் ஆகிருப்பே…. கல்யாணத்தோட உனக்கு அடிச்சிருக்கு பாருய்யா……. லக்கி…’’

‘‘சார்…. நான் உங்களை மாதிரி திறமையான, எல்லோரும் விரும்புற மாதிரியான அதிகாரியா ஆகணும்னு ஆசைப்படுறேன்’’

‘‘பார்ரா…. இப்பவே ஐஸ் வைக்க ஆரம்பிச்சிட்டே… இப்போதைக்கு என்கிட்ட உனக்கு கொடுக்க எதுவும் இல்லேப்பா… இந்தா…. வாழைப்பழம் சாப்பிடு’’ என்று ஒரு வாழைப்பழத்தை எடுத்து அவரிடம் கொடுத்தார் நெதன்யாகு.

இப்படியே எல்லோரும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். சில வீரர்கள் கால்களை நீட்டி அமர்ந்தபடி தூங்க ஆரம்பித்திருந்தனர்.

சுமார் 7 மணி நேர பயணத்துக்கு பின்னர், விமானி ஜோஷூவாவிடம் இருந்து ஒரு அறிவிப்பு வந்தது.

‘‘வீரர்களே நாம ஜோமோ கென்யாட்டா விமான நிலையத்தை நெருங்கிக்கிட்டு இருக்கோம். எல்லோரும் பாதுகாப்பு பெல்ட்டை போட்டுக்கோங்க…’’

ஒலிபெருக்கி இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அடுத்த சில நிமிடங்களில் கட்டிடங்கள், சாலைகள் அனைத்தும் விமானத்துக்கு மிக நெருக்கமாக பின்னே சென்று கொண்டிருந்தன. இரவு நேரத்தில் சத்தத்தை கிழித்து கொண்டு விமானங்கள் அங்கு தரையிறங்கின.

ஜோமோ கென்யாட்டா விமான நிலையத்தில் அதிகபட்சம் 20 நிமிடங்கள் நின்ற விமானங்கள், எரிபொருள் நிரப்பப்பட்டதை தொடர்ந்து மீண்டும் பயணத்தை தொடர்ந்தன.

விமானத்தில் இப்போது பெரும்பாலான வீரர்கள் தூக்கத்தில் இருந்தனர். சிலர் தூக்கம் வராமல் கண்ணை மூடி யோசித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு விஷயங்கள் ஓடிக் கொண்டிருந்தன.

மேப்பை வைத்து தனக்கு அடுத்த அதிகாரியிடம் ஆலோசித்து கொண்டிருந்தார் யோனாதன் நெதன்யாகு.

‘‘இப்போ தீவிரவாதிகள் பிடியில இருக்கிறவங்க அனைவருமே இஸ்ரேலியர்கள் இல்லையா…. மிஸ்டர் ராப்?’’ யோனாதன் கேட்டார்.

‘‘யெஸ்…. சார்….’’

‘‘அது நமக்கு இன்னமும் வசதியானது. அவங்களுடனான தகவல் தொடர்புக்கு அது மிகவும் உதவும். அதேசமயம் விமானிகள் குழுவினர் இருக்காங்க. அவங்க அடிக்கடி இஸ்ரேலுக்கு வந்து போறவங்கன்றதால அவங்களுக்கும் நம்ம ஹீ்ப்ரு மொழி தெரியும்னு மொசாத் அளித்த தகவல்ல தெரிஞ்சிருக்கு. இதையும் நாம கவனத்தில வச்சுக்கலாம்’’

‘‘யெஸ்…. சார்…’’

‘‘உங்க குட்டிப்பொண்ணு இப்ப என்ன படிக்கிறா?’’

‘‘போர்த் கிரேட் சார்…’’

‘‘குட் அவளை நல்லதொரு அதிகாரியாக ஆக்க பயிற்சி கொடுங்க’’

‘‘அவளுக்கு படையில டாக்டராக ஆகணும் ஆசை சார்…’’

‘‘ஓ….. அது கூட நல்லதுதானே… அவ ஆசைப்படி படிக்க வைங்க…. பெண் குழந்தைகள் தேவதைகள். அந்த வரம் உங்களுக்கு கிடைச்சிருக்கு…. அவளுக்கு நிறைய சாக்லேட்களை வாங்கிட்டு போங்க…..’’

‘‘யெஸ் சார்….. லாஸ்ட் டைம் நீங்க வந்திருந்ததை ஞாபகத்தில வச்சு கேட்டா… நீங்க வாங்கிக் குடுத்த பிளாக் சாக்லேட் அவளுடைய பேவரைட். நீங்க அடுத்து எப்போ வருவீங்கன்னு கேட்டா…. ஒரு நாள் வீட்டுக்கு வருவீங்கன்னு சொல்லியிருக்கேன்….’’

‘‘கட்டாயம் வர்றேன்….’’ என்ற யோனாதன் அவருடன் தொடர்ந்து ஆலோசனையை மேற்கொண்டார்.

சில மணி நேரங்கள் ஓடிய பிறகு…. விமானியிடம் இருந்து மீண்டும் ஒலிபெருக்கில் அழைப்பு வந்தது.

‘‘வீரர்களே நம்முடைய இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இன்னும் அரை மணி நேரத்தில் நாம அங்கு சென்றுவிடுவோம். தயாராக இருக்கும்படி அறிவுறுத்தவே இந்த அறிவிப்பு’’

ஒலி பெருக்கி அமைதியானது.

வீரர்கள் தத்தமது ஆயுதங்களை தயார் நிலையில் வைத்து கொள்ள ஆரம்பித்தனர். விமானத்தில் உகாண்டா அதிபர் இடி அமீன் பயன்படுத்தும் கருப்பு நிற மெர்சிடஸ் போன்ற கார் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. அதில் உகாண்டா நாட்டு கொடிகள் முன்புறம் பொருத்தப்பட்டிருந்தன. அந்த காரின் முன்புறமும் பின்புறமும் 2 ராணுவ ஜீப்புகளும் நிறுத்தப்பட்டிருந்தன.

முதல் ஜீப்பில் மெர்சிடஸ் காரில் 8 வீரர்கள் ஏறிக் கொண்டனர். ஜீப்களில் தலா 8 வீரர்கள் ஏறிக்கொண்டனர்.

யோனாதன், ஜோய்ஷ், ராப் உள்ளிட்டவர்கள் முதல் ஜீப்பில் இருந்தனர். மற்ற தாக்குதல் வீரர்கள் 5 பேர் ஜீப்பை ஒட்டி ஓடி வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அதனால் அவர்கள் இயந்திர துப்பாக்கிகளுடன் காரை ஒட்டி நின்று கொண்டனர்.

விமானத்தின் ஜன்னல் வழியே பார்த்தபோது, எண்டபே விமான நிலையத்தின் மின்விளக்குகள் தெரிய ஆரம்பித்தது. அது பெரிய அளவில் பயன்படுத்தப்படாத விமான தளம் என்பதால் ஓடுபாதையில் முழுமையாக விளக்குகள் இல்லை. ஆனால், சாமர்த்தியமான ஒரு விமானியால் அந்த விளக்குகளை வைத்தே விமானத்தை தரையிறக்க முடியும்.

அதுவும் ஜோஷூவா போன்ற விமானிகளால் இது சர்வசாதாரணம். விமானம் திட்டமிட்டபடி, ஓடுதளத்தில் ஓடி நின்றது. போர்க்கால வேகத்தில் விமானத்தின் பின்பக்க கதவுகள் திறக்கப்பட்டன. தாக்குதல் பணிக்கு அல்லாத மற்ற வீரர்கள் துப்பாக்கி குண்டுகளைப்போன்று, கதவுகள் முழுமையாக திறக்கப்படும் முன்பே தாவிக்குதித்து கீழே இறங்கினர். அவர்கள் கருப்பு நிற உடை அணிந்திருந்ததால் தூரத்தில் இருந்து பார்த்தாலும் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்றே கூறலாம்.

இறங்கிய வேகத்தில் அவர்கள் தயாராக பின்பக்க பையில் வைத்திருந்த விமானத்துக்கு வழிகாட்டும் விளக்குகளை ஓடுபாதையில் ஓடிக்கொண்டே பொருத்த ஆரம்பித்தனர்.

விமானத்தின் கதவு முழுமையாக தரையிறக்கப்பட்டவுடன் ஜீப்கள், கார் தரையிறக்கப்பட்டன.

திடீரென ஓடுதளத்தில் இருந்து ஒரு பெரிய விமானம், அதுவும் உகாண்டா நாட்டு கொடியுடன் வந்து இறங்கியதை பார்த்தவுடன், விமான கட்டுப்பாட்டு கோபுரத்தில் இருந்த வீரர்கள் அதிர்ச்சியுடன் அதை பார்த்துக் கொண்டிருந்தனர். வருவது யாராக இருக்கும் என்று யோசித்து கொண்டிருந்தபோது, அதிபரின் பாதுகாவலர்களுக்கான விசேஷ உடை அணிந்த வீரர்களுடன் ஒரு ஜீப்பும், அதைத் தொடர்ந்து அதிபரின் மெர்சிடஸ் கார் வருவதையும் பார்த்தவுடன், மொரீஷியஸ் சென்ற அதிபர்தான் திரும்பி வருகிறார் என்று அறிந்து, விமான ஓடுபாதையில் இருந்த அனைத்து விளக்குகளையும் எரிய விட்டனர்.

யோனாதன் தலைமையிலான வீரர்கள் அடங்கிய முதல் ஜீப், விமான கட்டுப்பாட்டு கோபுரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. யோனாதனின் கடிகாரம் அப்போது அதிகாலை 4.20 நிமிடத்தை காட்டிக் கொண்டிருந்தது.

அந்த கோபுரத்தின் கீழ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மூத்த அதிகாரி, அதிபர் இடி அமீன் வெள்ளை நிற மெர்சிடஸ் காருக்கு மாறிட்டாரே. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த காரி்ல்தானே இங்கு வந்தார். இப்போது திடீரென கருப்பு நிற காரில் வருகிறாரே என்று மனதில் எழுந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள, பைனாக்குலர் மூலம் அதிபரின் காரை உற்றுப்பார்த்தார்.

அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

(தொடரும் 9) 

No comments:

Post a Comment

Thanks